Sunday, January 17, 2010

பெண்


இதன் நோக்கம் பெண்களின் உரிமை பற்றி விவாதிப்பது அன்று. எனக்கு தெரிந்த எதிர்கொண்ட சில தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வதே.......ஏதும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டி மன்னிக்கவும்...

தன் காதல் மனைவிக்காக "தாஜ்மஹால்" கட்டியவன் என்று இன்றளவும் புகழ் மகுடம் சூடிக்கொண்டிருக்கிறான் ஷாஜஹான். ஆனால் அவன் மனைவி வருடம் தவறாமல் குழந்தை பெற்று ஜன்னி கண்டு உடல் வெளிறியது நமக்கு தெரியுமா ? இது தெரிந்திருந்தால் ஷாஜஹான் செய்தது சிறிய கைம்மாறு என்றே வைத்துக் கொள்ளலாம்.ஆனால் புகழ் அவனுக்கு மட்டுமே....

ராமரின் மனைவி சீதையை கவர்ந்து சென்ற ராவணனிடம் போர் கொண்டு சீதையை மீட்டு வர ராமருடன் இலக்குமணன் சென்றதாக இதிகாசம் சொல்கிறது.ஆனால் 12 வருடம் இலக்குமனை பிரிந்த அவனது மனைவியின் நிலையை பற்றி நமக்கு தெரிய வைத்ததா இதிகாசம் ?

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர் என்பது நமக்கு தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவர்களுக்கு துச்சலை என்கிற தங்கை இருந்தாள் என்பது தெரியும்??

இயேசு முதல் பாரதி வரை பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் சமூகத்தில் இகழ்ச்சிக்கு உண்டாகினர். இன்றைய கால கட்டத்தில் கூட மனைவிக்கு மரியாதை கொடுத்தால் அவனது ஆண்மைத்தன்மை (henpecked ) கேலிக்கு உள்ளாகிறது . இன்று பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறது சமூகத்தில் ஆனால் அதே மரியாதை படிக்காத பெண்களுக்கும் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரியதே. வேலை பார்க்கும் பெண்கள் என்றால் அவர்கள் பேசினால் சம்பாதிக்கும் திமிர் என்று பேச்சு வருகிறது..சரி இருக்கட்டுமே தான் பிறர் உதவி இல்லாமல் வாழ்கிறோம் என்று ஒரு ஆணுக்கு மமதை இருக்கும்போது அது பெண்ணுக்கும் இருந்தால் என்ன தவறு ? அவளது திமிர் குணம் பிடிக்கவில்லை என்று சொல்லலாம் ஏன் என்றால் சக மனிதனிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்காமல் போகலாம் ஆனால் வேலை பார்ப்பதால் தான் அந்த திமிர் என்பது சரியான வாதம் அல்ல .

இன்றும் கூட தங்கள் மகனுக்கு வெளியில் சாப்பிடும் உணவு ஒத்து போவது இல்லை என்பதற்காக சில பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஏன் என் அலுவலகத்தில் கூட எனக்கு கிடைக்கும் அறிவுரை திருமணம் செய்து பார் நல்ல ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்பது.. இது திருமணத்தின் அவசியத்தையே கேள்விகுறியாக்குகிறது !!!!

வெளி உலகம் தெரியாமல் குடும்பப் பொறுப்பை மட்டுமே கவனித்து கொண்டு பல பெண்கள் இருக்கிறார்கள். ஏன் அதில் அவர்களுக்கு மகிழ்ச்சியும் உள்ளது. ஆனால் அவர்கள் மனதுக்குள் எத்தனை ஆவல்கள் புதைந்து கிடக்கின்றன? பணி புரியும் பலர் தங்களது தாயை அழைத்து வந்து இடங்களை சுற்றி காமிக்கும் போது அவர்களின் கண்களில் தெரியும் அந்த வியப்பு, இதுவரை பார்த்திராத கலாச்சாரம்,உணராத மகிழ்ச்சி என அவர்கள் மெதுவாக ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டு நடக்கும் போது கண்களில் கண்ணீர் வரத்தான் செய்கிறது.ஆனால் அவர்கள் மனதில் நினைப்பது தான் என்ன ?

பிழைக்க வழி இல்லை என்றால் ஒரு ஆண் தேர்ந்து எடுக்கும் பாதை கொலை.கொள்ளை, கடத்தல் இப்படி பல.ஆனால் ஒரு பெண் தேர்ந்து எடுப்பது விபச்சாரம், இதில் கூட மற்றவர்களுக்கு உபயோகமாய்த் தான் போகிறாள். பல பருவங்களிலும் பெண்களைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. எதிலோ படித்ததாய் ஞாபகம்
"பெண்ணைப் புரிந்து கொள்ள முயலாதே..அன்பு மட்டும் செய்" ..... முயற்சி செய்து பார்க்கிறேன்...

நன்றி
தரன்...

Tuesday, January 5, 2010

திரைப்படம்

திரைப்படம்

நமது வாழ்கையில் இரண்டறக் கலந்த ஊடகம்...குறிப்பாக எனது வாழ்கையில்....எனக்கு மிகவும் பிடித்த ஊடகங்களில் திரைப்படம் முதன்மையானது..
சிரிக்க வைத்த,சிந்திக்க வைத்த, அழ வைத்த, வெறுப்பேற்றிய,பயமுறுத்திய இப்படி பல திரைப்படங்கள் என்னை கடந்து போய் உள்ளது.திரைப்பட நடிகர்களை நினைத்துதான் எத்தனை கற்பனைகள்!!!..திரைப்படக் காட்சிகளை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்த அவலங்கள் எத்தனை!!

நான் மூன்றாவது படிக்கும் போது "தினம் தினம் உன் முகம் நினைவினில் வருகுது" என்ற பாடலுக்கு பள்ளியில் நடனம் ஆடி முதல் பரிசை வென்றேன்.அப்போது எனக்கு பரிசளித்த அந்த பிரபலம் "தம்பி கமல்ஹாசன் உன்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்" என்று கூறினார்...
அதன் பிறகு நான் ஆடவே இல்லை..கேட்ட எனக்கே இந்த நிலைமை என்றால் அதைச் சொன்ன அந்த பிரபலம் என்னவாகி இருப்பார் என்று தெரியவில்லை..பாவம்...

விக்ரமன் என்ற இயக்குனர் என் மானத்தை கப்பலில் ஏற்றிவிட மிகவும் உதவியவர்...இருப்பதை தானம் செய் என்ற நினைப்பில் பிச்சை கேட்ட ஒரு மூதாட்டியிடம் ** பைசா கொடுக்க அவள் என்னை திட்டிவிட்டு அந்த ** பைசாவை திருப்பி என்னிடமே கொடுத்ததை சொல்லவா, இல்லை நடிகர்களை போல கட்டு மஸ்தான உடல் வாகு பெற, உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அதிக பளு சுமந்து கழுத்துத் தசை பிடித்ததைச் சொல்லவா...அல்லது ரஜினிகாந்த் அணிவது போன்ற மூக்கு கண்ணாடி வாங்கி வந்து அது முதன் முதலாக MADRAS EYE என்ற கண் நோய்க்காக உபயோகப்பட்டதைச் சொல்லவா....

மிகச் சிறந்த பொழுது போக்கு ஊடகமான திரைப்படம் இது வரையில் எனது பொழுதைப் போக்க மிகவும் உறுதுணையாய் இருந்தது என்பதை என்னால் மறுக்க இயலாது.என்னை,
சிரிக்க வைத்த திரைப்படங்கள் ----> சதி லீலாவதி, சிங்கார வேலன், பிரண்ட்ஸ் மற்றும் பல..
சிந்திக்க வைத்த திரைப்படங்கள் ----> அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், மொழி மற்றும் பல..
அழ வைத்த திரைப்படங்கள் ----> மகாநதி, வெயில், பூவிழி வாசலிலே மற்றும் பல..
வெறுப்பேற்றிய திரைப்படங்கள் ----> கந்தசாமி,தென்னவன்,சங்கமம் மற்றும் பல..
ரசிக்க வைத்த திரைப்படங்கள் ----> காதலுக்கு மரியாதை, அஞ்சாதே,மௌன ராகம் மற்றும் பல ...
பயமுறுத்திய திரைப்படங்கள் -----> ஷாக், தருமபுரி, ஜெ கே ரித்திஷ் இன் நாயகன் மற்றும் பல...

நன்றி,
தரன்.







நட்புத் தோல்வி...

பரீட்சைத் தோல்வி, காதல் தோல்வி, வியாபாரத் தோல்வி இவைகளின் வரிசையில் இவைகளை போல வேதனை தரக்கூடியது நட்புத் தோல்வி....
" A Friend is a person who knows you well,with whom you can have affection and trust, and with whom you can feel the comfortableness..."


மேற்கூறியவைகளில் ஒன்று குறை படும்போதோ அல்லது அவைகளுக்கு அப்பாற்பட்டு சில குறைப்படும்போதோ அடைவது நட்புத் தோல்வியா?
தேடிச் சென்று அடையகூடியது அல்ல நட்பு, நட்பு என்கிற உணர்வு இரு மனிதர்களிடையே, இருவருக்கும் மற்றவர் பால் தோன்றக்கூடியது.இவ்வுணர்வு ஒருவரிடம் குறைப்படும்போது மற்றவர்க்கு அது நட்புத் தோல்வியா? அல்லது அவ்வுணர்வு தான் மற்றவரிடம் கொண்டது போல் மற்றவர் தன்பால் கொள்ளாததை அறிய வரும்போது அடைவது நட்புத் தோல்வியா?

மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியும் நிகழும் நிகழ்வுகளை நன்கு உணரக்கூடிய பருவம் (Maturedness) எய்தும் போது, அவனிடம் அன்பு எடை போட்டு உபயோகப் படுகிறது... அன்பு செலுத்தும் முன் இதயத்திற்கு முன்பு மூளையைத் துணையாகக் கொள்கிறான்...இது சரியா தவறா என்கிற வாதத்தை விட, அத்தகைய மனிதனுக்கு தோல்விகள் பகையாளிகள் ஆகின்றன என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இவ்வாறில்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் உரிமையோடும் நம்பிக்கையோடும் மற்றவரிடம் பகிரும் போது, மற்றவர் தன்னையல்லாமல் வேறொருவரிடம் அங்ஙனம் பழகுவதை உணருவது நட்புத் தோல்வியா ?
இல்லை தான் நண்பராக நினைப்பவரிடம் செலுத்தும் அன்பில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் எட்டிப்பார்க்கும் போது அடைவது நட்புத் தோல்வியா?

மேற்கூறிய அல்லது மேற்பிதற்றியவைகளின் மூலம் அடைவது நட்புத் தோல்வியா? அன்பை திரும்ப பெறாமல் கொடுத்துகொண்டே இருக்க நட்பால் ஆகுமா ? அங்ஙனம் நிகழ்ந்தால் அது நட்பாகுமா ?
மனிதனுக்கு எட்டாதவைகள் பல உண்டு என்பார்கள், அவற்றுள் ஒன்றாய் இதை நான் எடுத்துக்கொள்கிறேன்....